நேற்றிரவு அப்படி நடந்திருக்க வேண்டாம்..
உடனடியாக புத்தகமாக வேண்டிய ஒரு மேட்டர் எடிட்டிங்கிற்காக என் கம்ப்யூட்டரில் வெயிட்டிங்..
இன்றிரவு அதை முடித்த பிறகே தூக்கம் என்ற முடிவோடு பத்து மணிக்கு திருத்த ஆரம்பித்தேன்..
ஒரு மணி நேரம் ஓடியது.. சுவாரஸ்யமே இல்லாத அந்த மேட்டர் வலுக்கட்டாயமாக தூக்கத்தை இழுத்து வந்தது..
தூங்கினால் வேலைக்கு ஆகாது என்று ஒரு கப் காபியை உடலுக்குள் அனுப்பிவிட்டு, ஒரு மாறுதலாக இருக்கட்டுமே என்று பாதியில் நிறுத்தி வைத்திருந்த 'கஹானி' படத்தை டிவி, டிவிடியில் ஓடவிட்டேன்.
படம் முழுக்க வயிற்றை தள்ளிக்கொண்டு கணவனை தேடி அலைந்த வித்யா பாலன் கடைசியில் சஸ்பென்ஸை உடைத்துவிட்டு போனார்.. படம் முடிந்தது..
மறுபடியும் மேட்டர்.. திருத்தல்..
இப்போது ஒன்றரை மணி நேரத்தில் தூக்கம் திரும்பவும் எட்டிப்பார்த்தது..
இந்த முறை மிச்சமிருந்த அரை கப் காபியை உறிஞ்சிவிட்டு, பாலகுமாரனின் 'உடையார்' நாவலின் 5ம் பாகத்தில் முன்பு நிறுத்தி வைத்திருந்த இடத்திலிருந்து வாசிக்க ஆரம்பித்தேன்..
சக்கரவர்த்தி உடையார் ஸ்ரீராஜராஜதேவர் அவர் மனைவி பஞ்சவன் மாதேவி முன்னிலையில் ஒரு வீரன் காவிரி நதியில் தன் ரத்தத்தை சிந்தி தன்னைத்தானே பலியிட்டுக்கொண்ட வரிகளை வாசிக்க வாசிக்க என் தூக்கம் ஓடிப்போய் மூளை விழித்துக்கொண்டது..
அதற்குமேல் வாசிக்க மனசு வரவில்லை.. புத்தகத்தை மூடி வைத்துவிட்டு மிச்சமிருக்கும் மேட்டரை திருத்த துவங்கினேன்.
முழு எடிட்டிங்கும் முடிந்தபோது காலை குயிலின் ஓசை கேட்டது.. நேரம் அதிகாலை 5 மணி..
தூங்கப் போனேன்.
திடீரென ராஜராஜதேவர் கையில் வாளோடு என்னை உலுக்க, அவரை சமாதானப்படுத்திக் கொண்டிருந்தார் வித்யாபாலன்..
'பசிக்குது.. சீக்கிரம் எழுந்து டிபன் பண்ணு..' உடையாரின் கோபக் குரல் உச்சத்துக்குப் போனது..
பயந்துபோய் கண்ணைக் கசக்கி எழுந்தால் கையில் காபியோடு உடையாருக்கு டப்பிங் கொடுத்துக்கொண்டிருந்தார் என் கணவர்..
அரைகுறை தூக்கம்.. அசதி.. காத்திருக்கும் கடமைகள்.. எல்லாமுமாய் சேர்ந்து இன்றைய ஞாயிறு பொழுது தலைவலியோடு துவங்கியது..
ஆனா ஒண்ணுங்க..
தஞ்சை பெரிய கோயிலை கட்ட ஸ்ரீராஜராஜசோழனுக்கு பக்கபலமாக நின்ற பஞ்சவன் மாதேவி கேரக்டரில் அரச உடையில் வித்யாபாலன் சூப்பர்..

நல்ல கனவு
ReplyDelete