Wednesday, October 16, 2013

parambikulam பரம்பிக்குளம்

விடுமுறை காலம் தொடங்கிவிட்டது. இருக்கும் இடம் விட்டு இன்னொரு இடம் தேடிச் செல்ல தயாராகிவிட்டவர்கள் அந்த டூர் லிஸ்ட்டில் ’பரம்பிகுள’த்தையும் சேர்த்துக்கொள்ளுங்கள். மன அமைதியும் மகிழ்ச்சியும்தான் உங்கள் சாய்ஸ் என்றால் அது உங்களுக்காக அங்கே காத்துக்கிடக்கும். 

உங்களுக்காக ஒரு முன்னோட்ட மினி உலா, இதோ...

போவோமா பரம்பிக்குளம்…

வாழ்க்கைப் பயணத்தின் சுவாரஸ்ய சூட்சுமங்களை கற்றுத்தருபவை வழிப் பயணங்கள்.. அந்தவகையில் நாட்டுப் பரபரப்பைவிட்டு சற்றே விலகி சிலமணிநேரங்கள் காட்டுவாசியாக விருப்பமுள்ளவர்களுக்கு பெஸ்ட் சாய்ஸ் 'பரம்பிக்குளம்'. 

காற்றும் தண்ணீரும் கைகோர்க்கும் சலசலப்பு பின்னணி இசை... வருவதும் வழி தவறுவதுமாக கண்ணாமூச்சி காட்டும் சூரிய ஒளி... இரவில் துணையாக நிலா வெளிச்சம்... இன்னதென்று பெயரிடப்படாத பலப்பல பூக்களின் கலவை மணம், அதில் கொஞ்சம் காந்தள்... வர்ணனை உங்களை வருடுகிறதா? 

இந்த வார்த்தைகளுக்குச் சொந்தமான இடத்துக்கு வந்து பாருங்கள். கொஞ்சும் அழகு உங்கள் இதயத்தை கொள்ளையடிக்க, இன்ஸ்டண்ட் கவிஞராகிவிடுவீர்கள். இயற்கையின் கைப்பிடிக்குள் கதகதப்பாய் சுருண்டு கிடக்கும் அந்த இடம், பரம்பிகுளம். ஹாவென பரந்துகிடக்கும் அழகிய வனம். அதில் பாதம் பதித்துப் பயணிப்பது சுகானுபவம். 

பொள்ளாச்சியிலிருந்து இரண்டு மணி நேரம் பயணித்தால், கேரளப் பகுதியில், எழில் குவிந்திருக்கும் அந்த இடத்தை தொட்டுவிடலாம். பொள்ளாச்சியிலிருந்து மலை வழியே பேருந்து நகர, பனிக்கட்டிகளின் இடையே பயணிப்பது போன்ற ஜில் அனுபவத்தோடு ஆரம்பமாகும் ஆரவாரம். பேருந்து மலை முகட்டை தொடும்போது பரம்பிக்குளம் வனவிலங்கு சரணாலயமும், எகோ&டூரிஸம் என்ற இயற்கைச் சுற்றுலாவும் வரவேற்கின்றன. 

ஆறாவது விரலாக நம்மோடு ஒட்டிக்கொண்டிருக்கும் செல்போனுக்கு அங்கே ஓய்வு கட்டாயம். யாருடைய தொந்தரவும் இல்லாமல் இயற்கையோடு இணைந்த வாழ்வை நாம் முழுமையாக அனுபவிக்க வேண்டுமில்லையா?! அதனாலோ என்னவோ டவர்களுக்கு தடா. ஸோ, நோ சிக்னல். 

பரம்பிக் குளத்தில் என்னவெல்லாம் இருக்கும். இப்போது என்னென்ன பார்க்கலாம் என்பதை அங்குள்ள மினி அரங்கினுள் தெரிந்துகொள்ளலாம். பட்டாம் பூச்சிகள், பறவைகள், பரந்து விரிந்திருக்கும் கிளைக் காடுகள் என தகவல்களைத் தெரிந்துகொண்டு விரும்பும் இடத்தை தேர்வு செய்யலாம். தகவல் களஞ்சியமாக, வழிகாட்டியும் உடன்வர வழி ஆரம்பித்தோம் நம் வன உலாவை...

காட்டைத் தொட்டதுமே நம்மை உரசாத குறையாக ஓடுகின்றன மான்கள். அலட்சியமாய் பார்த்துச் சட்டென தலை திருப்புகின்றன மயில்கள். வனம் என்பதே மனிதனைத் தவிர்த்து, பிற உயிரினங்களுக்கான வாழ்விடம். மனிதன் அங்க்லே அழையா விருந்தாளிதானே! ஆக, சப்தம் கூடாது, சிவப்பு, மெஜந்தா போன்ற அடர் வண்ண ஆடைகளை அணியக் கூடாது. செடி, மரங்களைத் தொடக்கூடாது.. என்று சிறு விஷயங்களிலும் சீரியஸான கட்டுப்பாடுகள்.

அவர்கள் சொல்பேச்சு கேட்டு சத்தமில்லாமல் நடந்தோம். அந்த அமைதிக்கு மரியாதை தரும் விதமாக ஆங்காங்கே மலை அணில், புள்ளி மான், யானைகள், காட்டெருமை... என்று சில பல விலங்குகளும் பிராணிகளும் எட்டித்தொடும் தொலைவில் அப்பிராணிகளாக உலாத்துகின்றன.

இந்த மினி சுற்றிப் பார்த்தல் முடியும்போது சூரியன் உச்சிக்கு வந்திருந்தான். மதிய உணவுக்குப் பிறகு வந்த களைப்பு, உண்ட களைப்பு எல்லாம் மறந்து வண்டியில் சிறிது தூரம் பயணித்தால் வந்துவிடுகிறது, கன்னிமரா தேக்கு மரம். 

'என்னைப் பார்.. பிரமித்து நில்!' என்று தனது கம்பீரத்தால் மிரட்டுகிறது அந்த மரம். அடேங்கப்பா என்று வியப்பில் திறக்கும் வாயை மூட நமக்கு வெகு நேரம் ஆகிறது. அவ்வளவு பருமன்! மிக மிக உயரம்! 450 ஆண்டுக்கு முந்தோன்றிய மூத்த மரம்.. 'மஹாவிருட்ஷ புரஸ்கார்' என்று விருதுகள் பெற்று கவுரவம் மிக்கது. இப்படி அந்தத் தேக்கு மரத்தின் தகவல்கள் அனைத்தையும் ஆச்சரியக்குறிக்குள்ளேதான் அடைக்க வேண்டியிருக்கிறது. இந்த மரம் இருக்கும் பகுதி சற்று உள்ளடங்கி, அடர்ந்த காடாக, புல்வெளிகளும், நீர்த்தேக்கங்களுமாக விலங்குகளுக்கு விருப்பமான இடமாக இருக்கிறது. சர்வ சுதந்திரமாக உலவும் அவற்றை வண்டியிலிருந்தபடியே ரசித்தோம்.

சற்று தூரத்தில் மலைவாழ் மக்களின் வீடுகள். அவற்றைத் தண்டிச்சென்றால் கண்ணுக்கெட்டிய தொலைவுவரை தண்ணீர் மயமான பெரிய ஏரி. துடுப்பு போடும் ஆசை தொற்றிக்கொள்ள அந்த நிமிடமே படகுச்சவாரிக்கு கிளம்பிவிட்டோம். 

மூங்கில் படகெடுத்து கொஞ்சதூரம் போயிருப்போம்... கரை ஒதுங்கி ரெஸ்ட் எடுக்கும் முதலை ஒரு பக்கம்... தாகம் தணிக்கும் மான்கள் கூட்டம் எதிர்ப் பக்கம்... இன்னும் சற்று தள்ளி பிளிறலோடு நீரை வாரி தலையில் தெளித்துக்கொள்ளும் மினி யானைக் கூட்டம்... என்று நம் கண்கள் தொட்ட காட்சிகள் அனைத்தும் அத்தனை அழகு. ரசித்தபடியே நடு ஏரிக்கு வந்திருந்தோம். பக்கத்தில் ஒரு தீவு தென்பட்டது. குட்டிக்குட்டி குடில்கள் கொண்ட குட்டித்தீவு அது. அங்கு இரவில் தங்கினால் புலி யானை கரடிகளைப் பார்க்கலாம். 

இருள் சூழ்ந்தது.

என்ன கொண்டாட்டமோ தெரியவில்லை.. நாலாத்திசையிலும் ரிங்... ருங்... என்று விதவிதமாக பூச்சிகளின் இன்னிசை ரீங்காரம். நீண்ட நடை, கானகத்தின் வாடை என்று அனுபவப் புதுமை ஏற்படுத்தும் சந்தோஷத்தோடு காட்டின் மடியில் இருந்த டெண்டின் கட்டிலில் படுத்ததுதான் தெரியும். அடுத்த நிமிடம் தூக்கம் கண்களைத் தழுவியது. 

மறுநாள் பொழுது பறவைகளோடு விடிந்தது. எண்ணிக்கையில் அடக்க முடியாத அளவுக்கு பலவகை பறவைகளைக் கொண்ட பரம்பிக்குளம் இன்னொரு வேடந்தாங்கல். 

அன்றும் ஆரம்பம் நடைப் பயணம்தான். பல பறவைகள் தமது உருவத்தைக் காட்ட, சிலவற்றுக்கு என்ன வெட்கமோ குரலை மட்டும் அனுப்பிவிட்டு முகத்தை மறைத்துக்கொண்டன. ஒவ்வொரு குரலிலும் ஓராயிரம் ஸ்வரங்கள். இசை பாடும் காடு. 

வழி நெடுக கஸ்தூரி மஞ்சள் செடி. காட்டுக்கு நடுநடுவே சின்னச் சின்ன ஓடைகள், சுனைகள். விலங்குகளும், பறவைகளும் தண்ணீர் குடிப்பதற்கு ஏற்ப இயற்கை செய்துகொடுத்துள்ள வசதி!

அன்று நாம் சென்ற பாதையில் ஆங்காங்கே ஆழமானப் பள்ளம். எந்த மாநகராட்சியின் கைங்கர்யமோ” என்று நாம் யோசிப்பதை புரிந்து, “இது கரடியோட வேலை.. கிழங்குகளத் தேடி இப்படி குழி பறிச்சு வெச்சுட்டுப் போகுதுங்க” என்கிறார் கைடு அண்ணா. ’ஆஹா இது கொஞ்சம் ஆபத்தான இடம் போலயே’ என்று நாம் சுதாரிக்கும்போதே மேலிருந்து தொப் என்று ஒரு சத்தம். பதறி தள்ளி நின்றால், நம் கால் அருகே குடுகுடுவென துள்ளி ஓடியது அந்த அனிமல். அதுவரை பார்த்தரியாத ஒரு உயிர். முயல் மாதிரி இருந்த அது, மலை அணிலாம்! அம்மாடி எவ்வளவு பெரிசு! வழி நெடுக ஆங்காங்கே பெரிய பெரிய மரங்கள் விழுந்து கிடந்தன. ’அதை யாரும் எடுத்துப் போவதில்லையா?’ என்றால், கிடைத்த பதில் இருக்கிறதே... அது சபாஷ் ரகம்,

”காட்டின் பொருள் நாட்டுக்கு இல்லை. மரமாக இருந்தாலும் சரி.. அதே மண்ணோடு மண்ணாக மக்கித்தான் போகவேண்டும். காட்டின் சொத்து காட்டுக்கே சொந்தம்!” 

- அட சொல்ல வைத்தது வன நேர்மை! ஏனோ நாட்டை நினைத்து நமக்கு பெருமூச்சு வந்தது.. 

பரம்பிக்குளம் பகுதியில் 150 மலைவாழ் குடும்பங்கள் வசிக்கின்றன. அவர்களின் வாழ்க்கைக்காகவும் இயற்கை வளத்தைக் காக்க வேண்டும் என்ற எண்ணத்தை மனிதர்களிடையே வலியுறுத்தவும்தான் எகோ செண்டர் வன உலாக்களுக்கு அனுமதி தருகிறதாம். 

எங்கும் அமைதி... எல்லாப் பக்கமும் பசுமை... கிட்டத்தில் காட்டு உயிரினங்களின் தரிசனம் என்று அந்த இரு நாட்களும் நாடு நகரம் மறந்து காட்டுச் சுழலில் மனம் ஒன்றித் திளைத்திருந்த நாம் கிளம்ப வேண்டிய நேரம் வந்தது.

வா... வா... என்று தன்னை நோக்கி இழுக்கும் சக்தியை ஏகத்துக்கும் வைத்திருக்கும் இயற்கையை விட்டுப் பிரிய மனதே இல்லைதான்.. என்ன செய்ய? கடமைகள் காத்திருக்கின்றனவே... 

காட்டின் வாசலில் நின்று மீண்டும் ஒருமுறை உள்ளே திரும்பிப் பார்த்தோம். அம்மா அப்பா அழகான குட்டி என்று குடும்ப சகிதம் நின்றிருந்த யானைக் கூட்டம் ஒன்று தும்பிக்கையை உயர்த்திக் காட்டின. 

நமது பாஷையில் அது, ’டாட்டா’.

இது ரூல்ஸ்..

* காட்டுக்குள் புகை பிடிக்க, மது அருந்த தடா.
* பாட்டு, அதிகச் சத்தம் கூடாது.
* காலை 7 மணிக்கு முன், மாலை 5 மணிக்கு மேல் வெளி வாகனங்கள் பரம்பிக்குளம் வர அனுமதி இல்லை.
* பரம்பிக்குளம் தாண்டி அடர் வனங்களுக்குச் செல்ல யாருக்கும் அனுமதி கிடையாது.
* பிளாஸ்டிக் பொருள்கள், பைகளை வீசக்கூடாது. (பிளாஸ்டிக் பையக் கண்டால் அதிகாரி முதல் மக்கள் வரை பதறிப் போய் எடுத்து, குப்பைத் தொட்டியில் போடுகிறார்கள். பிராணிகள் சாப்பிட்டால் அவஸ்தைப்படுமே என்ற அக்கறையில்)
* 5 முதல் 7 பேர் வரை சேர்ந்து செல்லலாம். பெரிய கூட்டம் வசதியாக இருக்காது. அதே போலத் தனியாகவும் செல்லக் கூடாது. 
* வழிகாட்டி இல்லாமல் காட்டுக்குள் காலடி வைக்கக்கூடாது. 


இது ரூட்.. 

* முதல் நாள் 12 மணியிலிருந்து மறுநாள் 12 மணி வரை ஒரு நாள் டெண்ட் வாடகை ஒரு ஜோடிக்கு ரூ. 4000. சீசன் இல்லாத நாட்களில் ரூ. 3500. குழந்தை என்றால் ரூ. 500. கூடுதல். தங்கும் அறை, சுவையான உணவு, காபி, டீ, வாகன வசதி, உதவியாளர்கள் என்று அத்தனை செலவுகளும் இதில் அடங்கும். தங்கும் அறைகள் பல்வேறு கட்டணங்களில் கிடைக்கின்றன.
* ஒரு வாரத்துக்கு முன்பே வங்கி மூலம் கட்டணத்தைச் செலுத்தி, புக் செய்துவிட்டுத்தான் போக முடியும்.
* செலவு அதிகம் என்று நினைப்பவர்கள் பரம்பிக்குளம் வரை பேருந்தில் வந்து எகோ செண்டரில் இறங்க வேண்டும். ரூ. 140/- செலுத்தினால் 3 மணி நேரம் வன உலாவுக்கு அழைத்துச் செல்வார்கள். 
காலை 6.15, 11.15 க்கு பொள்ளாச்சியில் இருந்து தமிழ்நாடு போக்குவரத்துக் கழக பேருந்து கிளம்புகிறது.
அதி சுத்தமான காற்று, புத்துணர்ச்சி ஊட்டும் மூலிகை வளம், ஜுவாலஜி மியூஸியம் என டாப் ஸ்லிப்பின் முழுச் சுவையையும் ருசித்து ரசிக்க, குறைந்த பட்சம் இரண்டு நாட்கள் தேவை.

No comments:

Post a Comment